ADDED : ஜன 17, 2023 06:46 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் ஆண்கள்மட்டும் கலந்து கொள்ளும்ஜக்கம்மாள் கோயில் வழிபாடு நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்றுநடைபெறும் விழாவில் ஆண்களும், சிறுமிகளும் மட்டுமே பங்கேற்கின்றனர்.
வாகை மரத்தின் அடியில் உள்ள ஜக்கம்மா சிலைக்கும், மரத்திற்கும்பக்தர்கள் கொண்டுவரும் வெள்ளைத்துணி, தேங்காய், பழம் உட்பட பொருட்களை வைத்து அலங்காரம் செய்து வழிபாடு நடக்கிறது. பக்தர்கள், 'நினைத்த காரியம் நிறைவேற ஜக்கம்மாள் அருள்புரிவதாக' கூறுகின்றனர்.
ஜக்கம்மா வாக்கு
நாயக்கர்கள் காலத்தில் ஜோதில்நாயக்கனுார் ஜமீனைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாவை பெண் கேட்டனர். ஜமீனை திருமணம் செய்ய மறுத்த ஜக்கம்மாள், மனமுடைந்து எருமார்பட்டி அருகே மலையிலிருந்து கீழே குதித்து இறந்து போனார். அவரது உடலை இந்தப் பகுதியில் உள்ள மயானத்திற்கு எருமார்பட்டியைச் சேர்ந்தவர்கள் எடுத்துவந்து எரியூட்டினர்.
அதன்பின் அவர் இங்கு தெய்வமாக இருப்பதாகவும், அவர் இறந்த நாளில் வழிபாடு நடத்தும்படியும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்த ஜமீன் பூமியில்'மலையளவு நெல் விளைந்தாலும், கடுகளவு கொள்ளு விளையாது' எனவும், ஜக்கம் மாள் வாக்கு கூறியுள்ளார் என்பது ஐதீகம்.
அதன்படி ஆண்டுதோறும் இங்கு வந்து வழிபாடு நடத்துகிறோம். கோயில் பகுதியில் சுடுகாடு இருந்ததால் அப்போதுமுதல் ஆண்கள் மட்டும் வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

