/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரத்து குறைவு காரணமாக மல்லிகை கிலோ ரூ.1800
/
வரத்து குறைவு காரணமாக மல்லிகை கிலோ ரூ.1800
ADDED : ஆக 27, 2025 07:01 AM
மதுரை : விநாயகர் சதுர்த்தி, வரத்து குறைவு போன்ற காரணங்களால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகை உட்பட அனைத்துப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. மல்லிகை நேற்று காலை கிலோ ரூ.1800க்கும் மதியம் ரூ.1500க்கும் விற்றது.
மற்ற பூக்களான கனகாம்பரம் ரூ.1200, பிச்சி 1000, முல்லை 1000,  செவ்வந்தி 300, சம்பங்கி 350, செண்டுமல்லி 150, பட்டன்ரோஸ் 200, பன்னீர் ரோஜா 300, கோழிக்கொண்டை 150, அரளி 400, மரிக்கொழுந்து 120க்கும் , தாமரைப்பூ ஒன்று ரூ.20க்கும் விற்றது.
இன்று (ஆக.27) விநாயகர் சதுர்த்தி, அடுத்த இரண்டு நாட்கள் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் வணிக வளாக வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்து.
அவர் கூறியது: மதுரை பகுதி கிராமங்களில் இருந்து மல்லிகை வரத்து உள்ளது. ஆடியில் மழையின்றி வெயில் அதிகம் என்பதால் மல்லிகை உற்பத்தி  குறைந்தது. வழக்கமாக இந்த சீசனில் 4 டன் முதல் 5 டன் மல்லிகைப்பூ  கிடைக்கும். ஆனால் 2 டன் அளவே வரத்து இருந்தது. இதனால் சிலர் கொடைரோடு, நிலக்கோட்டையில் இருந்து வாங்கி விற்றனர்.
காலையில் அருகம்புல் குறைவாக கிடைத்ததால் கிலோ ரூ.80க்கு விற்றது. மதியத்திற்கு மேல் வரத்து அதிகரித்ததால் ரூ.50 ஆக குறைந்தது. எருக்கம்பூக்கள் உதிரிப்பூவாக கிடைப்பதில்லை.  காடுகளில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறித்து மாலையாக விற்கின்றனர். வெள்ளெருக்கு மாலை, வண்ண எருக்கம்பூ மாலை ரூ.20 முதல் ரூ.30க்கு விற்றது. ஆக. 27, 28, 29   முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை கூட வாய்ப்புள்ளது.  கனகாம்பரம் வரத்தும் குறைந்ததால் கிலோ ரூ.1200க்கு மேல் விற்றது என்றார்.

