/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாத அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் நீதிபதி வலியுறுத்தல்
/
மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாத அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் நீதிபதி வலியுறுத்தல்
மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாத அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் நீதிபதி வலியுறுத்தல்
மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாத அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் நீதிபதி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2025 03:41 AM

மதுரை: ''மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாத அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்'' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எம்.தண்டபாணி பேசினார்.
'சைபர் சொசைட்டி ஆப் இந்தியா' (சி.ஒய்.எஸ்.ஐ.,) அமைப்பின் மதுரைக் கிளை துவக்க விழா மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடந்தது.
சி.ஒய்.எஸ்.ஐ., தலைவர் விஜயகுமார் வரவேற்று பேசியதாவது: 'டிஜிட்டல் அரஸ்ட்' உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. இதிலிருந்து பாதுகாப்பாக அலைபேசி, கம்ப்யூட்டரை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.
மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் பேசியதாவது: அலைபேசி மூலம் சிலர் வலைவீசி கொண்டிருப்பர். இதில் யாரும் ஏமாறக்கூடாது. ஏமாறுவதற்கு ஆசையே அடிப்படை காரணம். தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) சட்டம் 2000 ல் கொண்டுவரப்பட்டது. அது பற்றி 25 ஆண்டுகளான பின்னும் எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. சைபர் கிரைம் தொடர்பாக புகார் கொடுக்கும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.
உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி எம்.தண்டபாணி பேசியதாவது: சில நிறுவனங்கள் 1991ல் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக ஏமாற்றின. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 'டான்பிட்' சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக பணம் சென்றடையவில்லை.
நேர்மையாக இருப்பது எளிது. அவர்கள் எங்கும் செல்லலாம். தவறாக நடப்பது கடினம். அதற்கு திட்டமிட வேண்டும். நடிக்க வேண்டும். அச்சப்பட வேண்டும். தமிழகத்தில் 7 கோடி பேர் உள்ளனர். இதில் தவறு செய்வோர் எண்ணிக்கை குறைவு. குற்ற வழக்குகள் பதிவாவது குறைவு. புகார் செய்யாமல் இருப்போர் மிகக்குறைவு. நாட்டில் நேர்மையானவர்கள் அதிகம். அவர்கள் ஏமாறக்கூடாது. மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாமல் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும். அறம் என்பதற்கு இணையான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் என்றார்.
சி.ஒய்.எஸ்.ஐ.,செயலாளர் பாலு சுவாமிநாதன், மதுரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாபு பங்கேற்றனர். சி.ஒய்.எஸ்.ஐ., மதுரைக் கிளை தலைவர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.