/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழை நீரில் மிதந்த கம்மாபட்டி கிராமம் திட்டமிடல் இல்லாத 'மினி ஸ்டேடியம்' காரணம்
/
மழை நீரில் மிதந்த கம்மாபட்டி கிராமம் திட்டமிடல் இல்லாத 'மினி ஸ்டேடியம்' காரணம்
மழை நீரில் மிதந்த கம்மாபட்டி கிராமம் திட்டமிடல் இல்லாத 'மினி ஸ்டேடியம்' காரணம்
மழை நீரில் மிதந்த கம்மாபட்டி கிராமம் திட்டமிடல் இல்லாத 'மினி ஸ்டேடியம்' காரணம்
ADDED : டிச 04, 2025 06:25 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் சின்ன இலந்தைக்குளத்தில் வடிகால்களை மூடி அமைத்த 'மினி ஸ்டேடியத்தால்' கம்மாபட்டி பகுதி வீடுகளுக்குள் நள்ளிரவில் மழைநீர் புகுந்து அப்பகுதியினர் பாதிக்கப்பட்டனர்.
அலங்காநல்லுார் அருகே சின்ன இலந்தைகுளம் கம்மாபட்டியை சுற்றி பாசன ஓடை, வாய்க்கால், மழை நீர் வடிகால்கள் உள்ளன. இங்கு சோழவந்தான் தொகுதிக்கான 'மினி ஸ்டேடியம்' அமைக்கப்பட்டு கடந்த மார்ச்சில் திறக்கப்பட்டது.
ஸ்டேடியத்தின் நடுவே சென்ற வடிகால் பாதையில் மழைநீர் செல்ல சிறு சிமென்ட் குழாய்கள் வைத்துள்ளனர். நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழையால், குழாய் வழியாக மழைநீர் செல்ல முடியாமல் 'ஸ்டேடியம்' குளமாக மாறியது.
வீடுகளுக்குள் மழைநீர் அப்பகுதி சுமித்ரா, சபரி கண்ணன், முத்துநகை கூறுகையில்: இங்கு மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்' அமைத்தனர். இதன் சுற்றுச்சுவருக்கு கீழாக மழை நீர் வெளியேற முடியாமல் அதிகாலை 2:00 மணிக்கு வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் இடுப்பளவுக்கு நின்றதால் முதியோர், குழந்தைகளுடன் சிரமப்பட்டோம்.
காலை 8:00 மணி வரை மழை நீர் வடியாமல் அதிகரித்தது. ஊராட்சி நிர்வாகம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் அங்கன்வாடியில் தங்குங்கள் உணவளிக்கிறோம் என்றது. அலங்காநல்லுார் ரோட்டில் சிறிது நேரம் சாலை மறியல் செய்த பின் ஒன்றிய அதிகாரிகள் இயந்திரம் மூலம் வடிகால்களில் இருந்த செடிகளை அகற்றி ஆழப்படுத்தினர். எம்.எல்.ஏ.,வெங்கடேசன் கூடுதல் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தார். ஸ்டேடிய சுற்றுச்சுவரில் ஆங்காங்கே துளையிட்டு மழை நீரை வெளியேற்றினர்.
25 ஆண்டுகளுக்கு முன் மழை நீரால் பாதிப்புகளை சந்தித்தோம். தற்போது திட்டமிடல் இன்றி அமைத்த மினி ஸ்டேடியத்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
மீண்டும் நடக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

