/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டி அருகே நிலச்சரிவா தொடர் மழையால் சரிந்த பாறை
/
உசிலம்பட்டி அருகே நிலச்சரிவா தொடர் மழையால் சரிந்த பாறை
உசிலம்பட்டி அருகே நிலச்சரிவா தொடர் மழையால் சரிந்த பாறை
உசிலம்பட்டி அருகே நிலச்சரிவா தொடர் மழையால் சரிந்த பாறை
ADDED : நவ 04, 2024 06:27 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக ஓடைகளில் ஊற்று துவங்கியது. கன்னிமார்புரம் பகுதியில் வெள்ளைமலையில் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போது கிடைக்கும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதால் அடுத்தடுத்து கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருகின்றன.
வெள்ளைமலைப்பட்டியின் மேற்குப்பகுதியில் உள்ள வெள்ளைமலைத்தொடர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை குவாரிகள் செயல்பட்டன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதாலும், குவாரிகளில் வைக்கும் வெடிகளால் குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்பட்டதாலும் இந்தப் பகுதியில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கன்னிமார்புரம் பின்பகுதி வெள்ளைமலைத் தொடரில் பெரிய பாறையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் உடைந்த பாறையின் மேற்பகுதி பாளம்போல நகர்ந்து சரிந்து மலையடிவாரம் வரை மரம், செடிகளை அடித்துக் கொண்டு சரிந்து விழுந்தது. அடிவாரத்துடன் சரிவு நின்று விட்டதால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பாறை சரிந்தது நிலச்சரிவு போல இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
கன்னிமார்புரம் வழியாக 58 கிராம கால்வாய் கரையின் மேற்கே தேங்கும் மழைநீர் வெளியேற வழியில்லாமல் கரைகளுக்கு அருகிலேயே தேங்கியுள்ளது. இதில் ஆச்சியம்மாள் என்பவரின் தோட்டத்தில் கிணறு நீருக்குள் மூழ்கியுள்ளது. வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் தேங்கும் மழைநீர் முறையாக ஓடைகளுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.