ADDED : மே 04, 2025 04:01 AM

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனில் பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட பெட்ரோல் கசிவை கண்டறிந்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தர்மபுரியில் இருந்து 34 டேங்கர்களில் தலா 70 ஆயிரம் லிட்டர் வீதம் பெட்ரோல் நிரப்பிய சரக்கு ரயில் மதுரை மாவட்டம் கப்பலுார் 'சிப்காட்'க்கு சென்றது. இந்த ரயில் டேங்கர்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட ஸ்டேஷனில் நிறுத்தி சோதனை செய்வது வழக்கம்.
நேற்று காலை 7:40 மணிக்கு சோழவந்தானில் சோதனை செய்தபோது 31வது டேங்கர் வால்வில் பெட்ரோல் கசிவு கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையம் வந்தனர். ரயில்வே, தீயணைப்பு துறையினர், ஓ.என்.ஜி.சி., பணியாளர்கள் கசிவை நிறுத்தினர். பின் காலை 10:00 மணிக்கு சரக்கு ரயில் புறப்பட்டது. 2 மணி நேரம் நின்ற சரக்கு ரயிலால், சில ரயில்கள் தாமதமாக சென்றன.
