/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சமணர் தலங்களை சுற்றிப் பார்க்கலாம்; தொல்லியல் துறைகள் கை கோர்க்குமா
/
மதுரை சமணர் தலங்களை சுற்றிப் பார்க்கலாம்; தொல்லியல் துறைகள் கை கோர்க்குமா
மதுரை சமணர் தலங்களை சுற்றிப் பார்க்கலாம்; தொல்லியல் துறைகள் கை கோர்க்குமா
மதுரை சமணர் தலங்களை சுற்றிப் பார்க்கலாம்; தொல்லியல் துறைகள் கை கோர்க்குமா
ADDED : அக் 02, 2025 03:28 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் 18 சமணர் தலங்கள் இருந்தாலும் அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது. மத்திய, மாநில தொல்லியல் துறைகளுடன் சுற்றுலாத்துறை இணைந்து செயல்பட்டால் மதுரைக்கான சுற்றுலாத் தலங்களின் பட்டியல் அதிகரிக்கும். தமிழகத்தில் சமண பண்பாட்டு தலம் என்ற பெயரில் சமணர் தலங்களை மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கருங்காலக்குடி, திடியன், கொங்கர் புளியங்குளம், யானைமலை, திருவாதவூர், வரிச்சியூர் (குன்னத்துார்), முத்துப்பட்டி, முதலைக்குளம், விக்கிரமங்கலம், குப்பல்நத்தம், அழகர் மலை, மாங்குளம், அரிட்டாபட்டி சமணர் தலங்கள் உள்ளன. மத்திய தொல்லியல் துறையின் கீழ் திருப்பரங்குன்றம், கீழக்குயில் குடி, கீழவளவு, மேட்டுப்பட்டி பகுதிகளில் சமணர் படுக்கைகள் உள்ளன.
அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா தலம் பிரபலமாக பஸ் ஸ்டாண்டில் இருந்து போக்குவரத்து வசதி வேண்டும். ரோடு, கழிப்பறை, குடிநீர், இருக்கை போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். அரிட்டாபட்டியில் மலையேறுவதற்கான சரிவு படிக்கட்டு, கம்பிவலை அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. பல்லுயிர் தலம் என்பதால் கூடுதல் ஆய்வு நடந்த நிலையில் திட்டம் கிடப்பில் உள்ளது.
யானைமலையில் குடவரைக் கோயில், சமண சிற்பங்கள் உள்ளன. கழிப்பறை, பார்க்கிங் இருந்தால் நன்றாக இருக்கும். கருங்காலக்குடி அருகே ரோடு குறுகலாக உள்ளது. குவாரி இருப்பதால் பராமரிப்பற்று உள்ளது. இப்படி எல்லா சமண தலங்களிலும் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் செல்ல முடியாத நிலையே உள்ளது.
ஒருநாள் சுற்றுலா மதுரை - திருச்சி ரோட்டில் கருங்காலக்குடி, கீழவளவு, அரிட்டாபட்டி, திருவாதவூர், வரிச்சியூர் (குன்னத்துார்) சமணர் படுக்கைகளை ஒரே நாளில் 'ட்ரெக்கிங்' செய்து சுற்றி பார்க்கலாம். அதேபோல கீழக்குயில் குடியில் தமிழி கல்வெட்டு, செட்டிப்புடவு, தீர்த்தங்கரர் சிற்பத் திருமேனி, மாதேவி பெரும்பள்ளி, சமணர் படுக்கைகள் உள்ளன. கீழக்குயில்குடியை பார்த்த பின் அருகிலுள்ள முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம் தலங்களை ஒருநாள் சுற்றுலாத் திட்டமாக சுற்றுலாத்துறை அறிவிக்கலாம்.
சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகம் (டி.டி.டி.சி.) சார்பில் ஆடியில் அம்மன் கோயில் சுற்றுலா, புரட்டாசியில் பெருமாள் கோயில் சுற்றுலா என ஒருநாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் சுற்றுலாத்துறை தொல்லியல் துறையோடு இணைந்து சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் டி.டி.டி.சி., சார்பில் ஒருநாள் சுற்றுலா திட்டம் செயல்படுத்த முடியும்.