ADDED : ஏப் 27, 2025 05:36 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறை சார்பில் போதை நோயாளிகளை மீட்கும் வகையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் புதுவாழ்வு மையமான 'கலங்கரை' வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
20 படுக்கைகள் உள்ள இந்த வார்டில் தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: ஆல்கஹால் மற்றும் புகையிலைக்கு அடிமையான பழைய, புதிய நோயாளிகள் 40 பேர் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர். போதைக்கு அடிமையான ஒரு பெண்ணுக்கு கடந்த மாதம் சிகிச்சை அளித்து மீட்டோம். 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களுக்கு புகையிலை பழக்கத்தில் இருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பெரும்பாலும் குடிக்கு அடிமையானவர்களாக உள்ளனர். வார்டில் சேர்க்கப்படும் உள்நோயாளிகளுக்கு முதல் இரண்டு வாரங்கள் மட்டும் உறவினர்கள் உடனிருக்க வேண்டும். நோயாளி நடமாட ஆரம்பித்தால் அடுத்த 2 வாரங்களுக்கு தனியாக தங்கி சிகிச்சை பெறலாம்.
படுக்கையில் மட்டும் இருந்தால் மனஅழுத்தம் ஏற்படும் என்பதால் கேரம், செஸ் விளையாடலாம். வார்டில் உள்ள சிறு நுாலகத்தை பயன்படுத்தலாம். தினமும் யோகா பயிற்சி அளித்து மனதை அமைதிப்படுத்துகிறோம் என்றனர்.

