ADDED : பிப் 24, 2026 04:54 AM
மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கில், டி.எஸ்.பி., முன்ஜாமின் மனு, இரண்டாவது முறையாக நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீசார் தாக்கியதில் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கைதான நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ., சிவக்கு மார், ஏட்டு இளையராஜா ஆகியோர் கூடுதலாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
டி.எஸ்.பி.,யின் முன்ஜாமின் மனு ஏற்கனவே உயர் நீதிமன்ற கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று மீண்டும் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'அஜித்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவே நான் உத்தரவிட்டேன். சம்பந்தப்பட்ட போலீசார் அத்துமீறி தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
'இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட துணை இறுதி விசாரணை அறிக்கை குற்றவாளிகள் பட்டியலில் என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதால், என்னை காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை.
'இவ்வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, தெரிவித்தார்.
நேற்று, இதை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இவ் வழக்கில் கை தான, நான்கு போலீசாரின் ஜாமின் மனுக்களை பிப்ரவரி 16ம் தேதி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி தள்ளுபடி செய்து, 'உயர் அதிகா ரிகள் உத்தரவிட்டால் யாரை வேண்டுமானாலும் அடித்துக் கொல்வீர்களா?' என, போலீசார் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
