UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:26 PM
இனி ராகவேந்திரா மண்டபம் இயங்காது - சவுந்தர்யா ரஜினி
‛லவ்’ வெப்சீரிஸ் தொடர்பாக சென்னையில் பேசிய இதன் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த், ‛‛எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபம் 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சென்னையின் அடையாளங்களில் இதுவும் ஒன்று. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என அப்பா சொல்வார். இனி ராகவேந்திரா மண்டபமாக இயங்காது. அந்த இடத்தில் என்ன வரப் போகிறது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். அப்பாவின் வாழ்க்கை புத்தகமாக உருவாகிறது. அது பின்னாளில் படமாகலாம். நெல்சன் இயக்கத்தில் அப்பா, கமல் நடிக்கும் படத்தில் நானும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அடுத்து ஒரு படத்தை இயக்கும் பணியை துவங்கி உள்ளேன்’’ என்றார்.
படைப்பாற்றலை மாற்ற முடியாது - சோபிதா
‛வேட்டுவம்’ படத்தில் நடித்து வரும் சோபிதா துலிபாலா ஏஐ., குறித்து பேசியதாவது, ‛‛நான் மட்டுமல்ல, இன்று உலகமே ஏஐ., தொழில்நுட்பத்தில் மூழ்கி கிடக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் கூட சிலர் அவர்களது முக்கியமான விஷயங்களை நேரம் ஒதுக்கி செயல்பட முடியவில்லை. இது சரியா, தவறா என தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் அளவாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. என்னதான் ஏஐ., ஆட்டோமோஷன் என வளர்ச்சி பெற்றாலும் மனிதர்களின் தனித்துவமான படைப்பாற்றலை தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மாற்ற முடியாது’’ என்றார்.
யோகிபாபு, சத்யாவின் ‛கோல்டன் பாக்கியம்’
தமிழ் காமெடி நடிகர் யோகிபாபுவும், தெலுங்கு காமெடி நடிகர் சத்யாவும் இணைந்து ‛கோல்டன் பாக்கியம்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். ஜெயஸ்ரீ, அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்க, பவன் பாசம் ஷெட்டி இயக்குகிறார். காதலுடன் கிரைம், ஆக் ஷன் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழி கலைஞர்களையும் சேர்த்து இரு மொழி படமாக உருவாவதால் இதை ‘தெலுமிழ்’ படைப்பு என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆவணப்படத்திற்கு மம்முட்டி வாய்ஸ்
கேரளாவில் கால்பந்து விளையாட்டுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதை பேசும் விதமாக 'பந்தடிக்காம்' என்கிற 5 பாகங்களை கொண்ட ஆவணப்படம் ‘ஜீ5 ஓடிடி’யில் வெளியாகி உள்ளது. இதற்கு நடிகர் மம்முட்டி கதை சொல்பவராக குரல் கொடுத்துள்ளார். இந்த ஆவணப்படம் வெறும் கால்பந்து போட்டியை மட்டும் காட்டாமல் அது மக்களின் கலாசாரத்தோடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விவரிக்கிறது.
வாழ்நாள் பொக்கிஷம்: கீர்த்தி சுரேஷ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ‛டோரதி’ படம் ஒரு பக்கம் பாராட்டையும், மற்றொரு பக்கம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பதிவில், ‛‛என் இதயத்தின் ஒரு பகுதியை டோரதி எடுத்துக் கொண்டாள். என் மீது நம்பிக்கை வைத்து என்னையும் ஓர் அங்கமாக இந்த படத்தில் சேர்த்தமைக்கு நன்றி கார்த்திக் சுப்பராஜ். இளையராஜாவின் மாயாஜால உலகத்தில் நானும் இருப்பேன் என எண்ணியதில்லை. இதை வாழ்நாள் பொக்கிஷமாக மாற்றுவேன். ரிஷி, சனந்த்தின் நலம் விரும்பிகளில் நானும் ஒருத்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.
விடாமுயற்சி நிறைந்த பயணம் : ஜேசன் சஞ்சய்
சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்த ‛சிக்மா’ படம் இன்று ரிலீஸாகிறது. இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியதாவது, ‛‛என் முதல் படம், உற்சாகமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் இது. சினிமா எனும் பிரமாண்ட கடலில் அறிமுக இயக்குநராக நான் எனது பயணத்தை தொடங்குகிறேன். ரசிகர்கள் ஆதரவு தாருங்கள்’’ என்றார்.
