ADDED : செப் 19, 2026 03:22 AM
'மொத ராத்திரி' - கமல் பாராட்டு
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடிப்பில் ஆக., 21ல் வெளியான படம் 'மொத ராத்திரி'. தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் கமல் பாராட்டி உள்ளார். ராஜா கருப்பசாமி வெளியிட்ட பதிவில், “கோடம்பாக்கத்துல இருக்குற எல்லாருக்கும் நீங்க யாருனு காட்டணும்” என கமல் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ''சினிமாவை புரிந்து கொண்டதாக நான் நினைக்கும் போதெல்லாம், உங்கள் படங்களில் ஏதேனும் ஒன்று, இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தியது. நீங்கள் தந்த சினிமா, கற்று தந்த பாடங்கள் மற்றும் சினிமா மீது தீராத காதல் கொள்ள செய்ததற்கு நன்றி, என்றும் உங்கள் ரசிகன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் 2வது ரூ.300 கோடி வசூல் படம்
துல்கர் சல்மான் தயாரிக்க, கல்யாணி பிரியதர்ஷன் முதன்மையாக நடித்து கடந்தாண்டு வெளியான 'லோகா சாப்டர் 1' படம், மலையாளத்தில் முதல் ரூ.300 கோடி வசூலை குவித்த படமாக அமைந்தது. ஹீரோக்கள் செய்யாத சாதனையை ஹீரோயின் ஒருவர் செய்தார். இப்போது 2வது ரூ.300 கோடி வசூலாக கடந்த மாதம் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் எட்டி உள்ளது. கிரிஷ் இயக்க, நிவின் பாலி, மமிதா பைஜு நடிக்க, பஹத் பாசில் தயாரித்தார்.
அர்ஜுன்தாஸ் ஜோடியாக புதுமுகம்
நடிகர் அர்ஜுன் தாஸை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. இவருக்கு ஜோடியாக பிரீத்தி பகதலா என்பவர் தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை கலந்த பேமிலி, ரொமான்ஸ் படமாக உருவாகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. சென்னையில் படம் பூஜையுடன் துவங்கியது.
பான் இந்தியா படங்கள் நானி சொன்ன விளக்கம்
நானி நடித்துள்ள தெலுங்கு படமான 'தி பாரடைஸ்' தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அடுத்தவாரம் வெளியாகிறது. சென்னையில் பேசிய நானி, 'பான் இந்தியா' படம் பற்றிய கேள்விக்கு, ''என் படத்தை பான் இந்தியானு சொல்லாதீங்க. ஹிந்தி படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும்போது ஹிந்தி படம் என்றே சொல்கிறார்கள். தென்னிந்திய படங்களை தான் இப்படி அழைக்கிறார்கள். ஏன் என தெரியவில்லை. என் படங்களை எல்லா மொழி ரசிகர்களுக்கான படமாக கொடுக்க விரும்புகிறேன். இது என் கருத்து, மற்றவர்கள் சொல்வதை நான் நிறுத்த முடியாது'' என்றார்.
இசையால் இணையும் இளையராஜா, அனிருத்
சென்னையில் நடந்த 'கஸ்துாரி வீடு' என்ற பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் கமலக்கண்ணன், ''தயாரிப்பாளர் சங்கம் பல நன்மைகளை உறுப்பினர்களுக்கு செய்கிறது. அடுத்த ஆண்டு பிப். 13ல் சென்னையில் இசையமைப்பாளர்கள் இளையராஜா, அனிருத் இணைந்து 'இசையால் இணைவோம்' என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் திரட்டப்படும் நிதி தயாரிப்பாளர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளது'' என்றார்.
விஷாலுக்கு காயம்
'மகுடம்' படத்திற்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் 'புருஷன்' படத்தில் நடிக்கிறார் விஷால். நாயகியாக தமன்னாவும், முக்கிய வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கோவாவில் படப்பிடிப்பு நடக்கிறது. சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விஷால் சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்பா ஆர்வமாக உள்ளார் - ஜேசன் சஞ்சய்
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் 'சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்துள்ளனர். ஜேசன் கூறுகையில், ''என் அப்பா முதல்வர் ஆனது எனக்கும், அவரைச் சுற்றியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. 'சிக்மா' பட வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். முதல்வராக அவருக்கு பொறுப்புகள் உள்ளன. இருந்தாலும் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பார்க்க அவர் ஆர்வமாக இருக்கிறார்” என்றார்.
