ADDED : மே 08, 2026 02:31 AM
சவுத்ரி ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஆர்பி சவுத்ரி தயாரிக்க இருந்த 100வது படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டார். நானும் நடிக்கிறேன் என சொன்னேன்'' என்றார். அவரது ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா...
இது தான் 'இரண்டு வானம்' படக்கதை
இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி உள்ள 3வது படம் 'இரண்டு வானம்'. மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். ராம்குமார் கூறுகையில், ''சமூக நீதியை முக்கியமாக நினைக்கிற ஒரு பெண்ணும், வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக் கொள்ளளும் ஒரு பையனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். முரண்பாடுகள் மிக்க இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள், ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை'' என்றார்.
தண்ணீர் பிரச்னை 'வாரணாசி'க்கு சிக்கல்
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இங்கு தண்ணீருக்கு அடியில் ஒரு ஆக் ஷன் உள்ளிட்ட சில காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இதற்காக நீச்சல் குளம் போல் செட் அமைக்கப்பட்டு 150 லாரி தண்ணீர் தேவை என ஐதராபாத் மெட்ரோபாலிட்டன் வாட்டர் சப்ளையிடம் கேட்டுள்ளார் ராஜமவுலி. தற்போது கோடை காலம் என்பதால் அவ்வளவு தண்ணீர் தர முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். இதற்கான மாற்று ஏற்பாடுகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
ஹீரோவான இயக்குனர்
இயக்குனர்கள் ஹீரோ ஆவது ஒன்றும் புதிதல்ல. அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை தொடருகிறது. லேட்டஸ்ட்டாக இணைந்து இருப்பவர் பிரசாந்த் பாண்டியராஜ். புருஸ்லீ, மாமன் போன்ற படங்களையும், விலங்கு வெப்தொடரையும் இயக்கிய இவர் இப்போது விக்னேஷ் நடராஜன் இயக்கும் 'வாரண்ட்' என்ற வெப் தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். விலங்கு வெப் சீரிஸ் நடந்த அதே காலகட்டத்தில் இதன் கதை நிகழ்கிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
கேங்ஸ்டராக நாகார்ஜூனா... முதல்வராக தபு...
தெலுங்கு நடிகர் நாகார்ஜூ னா இப்போது தனது 100வது படத்தில் நடிக்கிறார். இதை தமிழில் நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்க, தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிரீயட் படமாக உருவாகும் இந்த கதையில் நாகார்ஜூனா கேங்ஸ்டராகவும், தபு முதல்வராகவும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
