/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எலும்பு தானத்தால் 122 பேருக்கு மறுவாழ்வு மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
/
எலும்பு தானத்தால் 122 பேருக்கு மறுவாழ்வு மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
எலும்பு தானத்தால் 122 பேருக்கு மறுவாழ்வு மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
எலும்பு தானத்தால் 122 பேருக்கு மறுவாழ்வு மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
ADDED : ஜன 09, 2025 05:22 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட எலும்பு வங்கி மூலம் 122 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
தென்தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் எலும்பு முறிவு பிரிவில் 2021 டிசம்பரில் ரூ.40 லட்சம் செலவில் எலும்பு வங்கி துவங்கப்பட்டது. தமிழகத்தின் 'டிரான்ஸ்டன்' அமைப்பு மூலம் உறுப்பு தானம் பெற இத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கை, கால் எலும்புகளை தானமாக பெற்று கதிர்வீச்சு முறையில் சுத்தம் செய்யப்பட்டு மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் குளிரில் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன. விபத்து மற்றும் பேரிடரில் சிக்கிய நோயாளிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த எலும்பு வங்கி வரப்பிரசாதமாக உதவுகிறது.  சேகரித்து வைக்கப்பட்டுள்ள எலும்புகள் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது என்றனர் டீன் அருள் சுந்தரேஷ் குமார், இணைப்பேராசிரியர் திருமலை.
அவர்கள் கூறியதாவது: இதுவரை 11 மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து எலும்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.  உயிரோடுள்ள 148 பேரிடம் இருந்து எலும்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2022ல் 20 பேருக்கும் 2023ல் 64 பேருக்கும் 2024ல் 28 பேருக்கும் எலும்புகள் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடுப்பெலும்பு முறிவு (பந்து கிண்ண மூட்டில்) முறிவு ஏற்பட்டால் சில நேரங்களில் (நெக் ஆப் பிமர்) பந்துக்கு கீழே உள்ள பகுதி உடைந்து போய் ரத்தஓட்டம் இழந்து விடும். இவர்களுக்கு பந்தை மட்டும் செயற்கை எலும்பாக மாற்றுவது 'கெமி ஆர்த்ரோபிளாஸ்டி' எனப்படும் பாதி இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை முறை. நிறைய பேருக்கு செயற்கை முறையில் பந்தையும் கிண்ணத்தையும் சேர்த்து மாற்றினால் முழுமையான இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை முறை.
ரத்தஓட்டம் தடைபட்ட பந்து (நெக் ஆப் பிமர்) தலைப்பகுதி எலும்பு நன்றாக இருந்தால் அதை சுத்தப்படுத்தி எலும்பு வங்கியில் சேகரித்து வைப்போம்.
விபத்தில் அடிபட்டு எலும்பில் சில பகுதிகளை இழந்தவர்களுக்கு கட்டி வந்து எலும்பில் துளை விழுந்தவர்களுக்கு அந்த எலும்பை தேவையான அளவு வெட்டி (போன் கிராப்ட்) ஆக பயன்படுத்துவோம்.
எலும்பு சேராத இடத்திற்கு பாலமாக பொருத்தி விடுவதால் அவர்களது இயல்பு வாழ்க்கை காப்பாற்றப்படுகிறது. இம்முறையில் 148 பேரிடம் இருந்து எலும்புகளை பெற்று மூன்றாண்டுகளில் 122 பேருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம் என்றனர்.

