/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மாற்றம் பேராசிரியர்கள் போராட்டம் எதிரொலி
/
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மாற்றம் பேராசிரியர்கள் போராட்டம் எதிரொலி
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மாற்றம் பேராசிரியர்கள் போராட்டம் எதிரொலி
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் மாற்றம் பேராசிரியர்கள் போராட்டம் எதிரொலி
ADDED : மார் 03, 2026 06:29 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக 4 மணி நேரத்தில் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் தேர்வாணையர் (பொறுப்பு) முத்தையாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இப்பல்கலை பேராசிரியர்கள் 103 பேருக்கு 2022 முதல் பதவி உயர்வு வழங்குவது நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக மூபா சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மூன்று ஆண்டுகள் பதிவாளராக பொறுப்பில் இருந்த ராமகிருஷ்ணன் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. பதவி உயர்வு ஆவணங்களையும் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று காலை 11:00 மணிக்கு பதிவாளர் அறைக்குள் மூபா பொதுச் செயலாளர் முனியாண்டி தலைமையில் சென்ற 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளே காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் அவர் சார்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பணிகள் உள்ளதாக கூறி விட்டு வெளியேறினார். இதனால் பேராசிரியர்கள் மதியம் 3:00 மணி வரை பதிவாளர் அறைக்குள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இப்போராட்டம் குறித்து பல்கலை கன்வீனர் சுந்தரவள்ளி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட் டது. அதிருப்தியான அவர், ராமகிருஷ்ணனை கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்து தேர்வாணையர் முத்தையாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கினார்.
கன்வீனர் உத்தரவிட்ட சில நிமிடங்களில் பதிவாளராக முத்தையா பொறுப்பேற்றார். போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களிடம் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தார். இரண்டு நாட்களில் பதவி உயர்வு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

