/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு புதிய ரயில் வழித்தடங்கள் தேவை
/
மதுரைக்கு புதிய ரயில் வழித்தடங்கள் தேவை
ADDED : ஆக 09, 2025 04:04 AM
மதுரை: மதுரையில் இருந்து பிற மாவட்டங்கள் செல்வதற்கான கூடுதல் ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டுமென, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தகச் சங்கத்தலைவர் ரத்தினவேலு மனு கொடுத்தார்.
அவர் கூறியதாவது: கூடல்நகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அனைத்து ரயில்களையும் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது சில ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. மதுரையின் வட பகுதியிலிருந்து வைகை ஆற்றைத் தாண்டி மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
உள்நாட்டு கன்டெய்னர் டெப்போ சேவை (ஐ.சி.டி.,) எனப்படும் 'நீரில்லா துறைமுக' வசதி கூடல்நகரில் 1999ல் துவக்கப்பட்டது. இந்த சேவை போதுமான அளவு பிரபலபடுத்தப்படவில்லை. கூடல்நகர் ஸ்டேஷனில் ஏற்றுமதிக்கான சரக்குகளை கன்டெய்னரில் ஏற்றி துாத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஐ.சி.டி., வசதிகளை கூடல்நகரில் மேம்படுத்த வேண்டும்.
மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு அருப்புக்கோட்டை வழியாக ரயில் பாதை, மதுரை --- மேலுார் - திருப்பத்துார் -- காரைக்குடி ரயில் பாதை, திண்டுக்கல் -- பெரியகுளம் -- குமுளி ரயில் பாதை, காரைக்குடி -- ராமேஸ்வரம் ரயில் பாதை மற்றும் திண்டுக்கல் -- சிவகங்கை ரயில் பாதை கேட்டு பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இத்திட்டங்களை இறுதியாக்கி போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றார்.