/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கீழமாசி வீதியில் விதி மீறலால் நெரிசல்
/
கீழமாசி வீதியில் விதி மீறலால் நெரிசல்
ADDED : செப் 21, 2011 12:09 AM
மதுரை : மதுரை யானைக்கல் சந்திப்பிலிருந்து விளக்குத்தூண் வரை கீழமாசி வீதியில் ஆக்கிரமிப்புகள் மற்றும் விதி மீறலால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.கீழமாசி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரோட்டின் கிழக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோர் கண்டபடி டூவிலர்கள், கார்களை நிறுத்துகின்றனர். லாரிகள் வர்த்தக நிறுவனங்கள் முன் நின்று, ரோட்டை மறித்து சரக்குகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் நெரிசல் உருவாகிறது.பழைய சென்ட்ரல் மார்க்கெட் கட்டண கார் பார்க்கிங் அல்லது காமராஜர் சிலை அருகே இலவச கார் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வருவோர் அறியாமல் வாகனங்களை 'நோ பார்க்கிங்'கில் நிறுத்தும்போது போலீசார் அறிவுறுத்துகின்றனர். அவர்கள் உரிய இடங்களுக்கு சென்று கார்களை நிறுத்துகின்றனர். உள்ளூர்வாசிகள் வாகனங்களை கண்டபடி நிறுத்தும்போது போலீசார் எச்சரித்தும் பயனில்லை. அரசியல்வாதிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளைத் தெரியும் என மொபைல்போனில் பேசி, போலீசாருக்கு சிபாரிசு செய்கின்றனர். இதனால், விதி மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.ரோட்டின் இருபுறமும் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர். பாதசாரிகள் ரோட்டில் நடக்க வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற வருவதை முன்கூட்டி தெரிந்து கொள்ளும் வியாபாரிகள், அதிகாரிகள் வரும்போது அகற்றி விடுகின்றனர். குறுகிய தூரமுள்ள கீழமாசி வீதியை கடப்பதற்குள் எரிபொருள் அதிகம் விரயமாகிறது. இதே நிலை தொடர்ந்தால், தீபாவளி நெருங்குவதால் அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும்.தீர்வு: கீழமாசி வீதியின் இருபுறமும் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விதியை மீறும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களை சரி செய்ய வேண்டும்.