ADDED : செப் 14, 2026 01:24 AM

வாடிப்பட்டி: -மதுரை வாடிப்பட்டியில் இரு இடங்களில் நடந்த விபத்துகளில் மூவர் பலியாயினர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் தண்டபாணி 63. உறவினர்களுடன் வெளியூர் சென்று விட்டு காரில் மதுரைக்கு திரும்பினார்.
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி ஜவுளி பூங்கா அருகே சென்ற போது காரின் இடது பக்க டயர் வெடித்ததில் நிலைத்தடுமாறி பெயர்ப்பலகை கம்பத்தில் மோதியது. இதில் இவரது தம்பி மகன் ஆனந்தகுமார் 30, சம்பவயிடத்திலும், அக்கா ராஜம்மாள் 63, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையிலும் இறந்தனர்.
தம்பி செல்வராஜ் 60, அவரது மனைவி விஜயலட்சுமி 55, காரை ஓட்டிய தண்டபாணி ஆகியோர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் மோதி பலி: வாடிப்பட்டி மேட்டுநீரேத்தானைச் சேர்ந்த மினி பஸ் டிரைவர் கருணாநிதி 55, வாடிப்பட்டியிலிருந்து புதிய பாரத்மாலா ரோட்டில் மதுரை நோக்கி டூவீலரில் சென்றார். கச்சைகட்டி பாலத்தை தாண்டி சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
