ADDED : ஜன 18, 2024 06:31 AM
திருமங்கலம் : திருமங்கலம் பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சக்கா 38. கணவர் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பச்சக்காவுக்கு 18 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பச்சக்கா கர்ப்பமானார். கிராமத்தினர் கேட்டபோது வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.
ஜன., 15ல் அவருக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பச்சக்காவிற்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தையை வீட்டில் வைத்து விட்டு, சாத்தங்குடி அரசு மருத்துவமனை, பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்றார். குழந்தை குறித்து டாக்டர்கள் கேட்டபோது தனக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், அதனால் அதனை கண்மாயில் புதைத்து விட்டதாகவும் முதலில் கூறியவர், பின் அக்குழந்தை தனது வீட்டிலேயே இறந்து கிடப்பதாக தெரிவித்தார்.
சிந்துபட்டி போலீசார், வி.ஏ.ஓ., ராமசந்திரன் பச்சக்கா வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஆண் குழந்தை இறந்த நிலையில் இரத்த கசிவுடன் கயிற்றில் கட்டப்பட்டு இரும்பு தட்டில் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இறப்புக்கான காரணம் குறித்து மேல்விசாரணை நடக்கிறது.