/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சந்தை சகிக்கலை... குமுறும் வியாபாரிகள்
/
சந்தை சகிக்கலை... குமுறும் வியாபாரிகள்
ADDED : நவ 03, 2024 04:48 AM

மேலுார்: மேலுார் கால்நடை சந்தை கழிவு நீர் தேங்கும் இடமாக மாறியதால் விவசாயிகள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
நகராட்சி பராமரிப்பில் உள்ள இச்சந்தை வாரத்தில் சனியன்று மாடுகளுக்கும், திங்களன்று ஆடு, கோழிகளுக்கும் செயல்படுகிறது. அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் வந்து செல்லும் இச்சந்தையில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
விவசாயி காஞ்சி கூறியதாவது: சந்தைக்குள் முழங்கால் அளவிற்கு சேறும், சகதியுமாக உள்ளது. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடையாது. சந்தை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். ஏற்கனவே நாற்று நடுதல் உள்ளிட்ட பலவித போராட்டங்கள் நடத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் வாகன 'பார்க்கிங்கை' ஒழுங்குப்படுத்த வேண்டும். சந்தையை ஏலம் விட்டு வருவாய் ஈட்டும் நகராட்சி நிர்வாகம் போதிய அடிப்படை வசதியை செய்து தருவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், ''கழிவுகளை உடனடியாக மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்படும். மேலும் தற்காலிகமாக தண்ணீர் தேங்காதவாறு மணல் அடித்து தரை உயர்த்தப்படும்'' என்றார்.