ADDED : நவ 13, 2026 07:41 PM

நவ., 14 உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம். இத்தினத்தில் சர்க்கரைநோய் குறித்த சில நிதர்சன உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 64 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 ல் இந்த எண்ணிக்கை 101 மில்லியனாக அதிகரிக்கும் என்கின்றன ஆய்வுகள்.
சர்க்கரைநோய் வராமல் தடுக்கவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைநோயின் பக்கவிளைவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளவும் சில நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். சர்க்கரைநோய் மற்ற நோய்களை போன்று மாத்திரைகளால் மட்டும் குணமாகக்கூடிய நோயன்று.
சர்க்கரைநோய் கட்டுப்பாட்டிற்கு மருந்துகளோடு வாழ்க்கை முறை மாற்றமும் அவசியம். வாழ்க்கை முறை மாற்றம் என்பது உணவுப்பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது.
உணவுமுறை மாற்றம் என்பது எவ்வகை உணவுகளை அதிகம் உண்ணலாம், எந்த வகை உணவுகளை அளவோடு சாப்பிடலாம், எவ்வகை உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்பது தான்.
உடற்பயிற்சி சர்க்கரைநோய் கட்டுப்பாட்டின் முதுகெலும்பு. நடை பயிற்சியே உடற்பயிற்சியின் ராஜா என்றாலும் அவரவர் தங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் குறைந்தது 30 நிமிடங்கள் விருப்பத்துடன் முனைப்பாக செய்ய வேண்டும்.
மன அழுத்தம் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தியானம், யோகா, சிரிப்பு பயிற்சி போன்றவற்றால் மன அழுத்தத்தை குறைக்கலாம்.
குடும்பத்தில் தாய், தந்தை யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் மற்ற உறுப்பினர்களுக்கும் வர வாய்ப்புகள் அதிகம். எனவே ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரையின் அளவை ரத்தத்தில் பரிசோதிப்பதும், உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதும் அவசியம். வரும் முன் காப்பதே நல்லது.
டாக்டர்கள் அறிவுறுத்தும் பரிசோதனைகளை தவறாமல் செய்வதுடன், அவர்கள் குறிப்பிடும் நாட்களில் மறுபரிசோதனைக்கு செல்வதும் நோயாளிகளின் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
– டாக்டர் எஸ். பாண்டியன், சர்க்கரை நோய் நிபுணர், செண்பகம் சர்க்கரை நோய் கிளினிக், மதுரை.
