காங்., வேட்பாளர் பட்டியலில் மேலுார் 'மிஸ்ஸிங்' * தலைவர்கள் 'மல்லுக்கட்டு' எதிரொலியா
காங்., வேட்பாளர் பட்டியலில் மேலுார் 'மிஸ்ஸிங்' * தலைவர்கள் 'மல்லுக்கட்டு' எதிரொலியா
ADDED : ஏப் 03, 2026 06:54 PM
மதுரை: மனுத்தாக்கலுக்கு கடைசி இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் நேற்று வெளியான காங்., வேட்பாளர் பட்டியலில் மதுரை மாவட்டம் மேலுார் தொகுதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இல்லை. இதன் பின்னணியிலும் காங்., தலைவர்களுக்குள் முட்டல் மோதல் இருப்பது வெளியாகியுள்ளது.
விஜயின் த.வெ.க., வருகையால் இத்தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை முதலில் பெற்றுச் சென்றது, காங்.,. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் ஏக்கப்படும் வகையில் 28 தொகுதிகளை பெற்றும், அதற்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் தமிழக காங்கிரசில் கடைசி வரை குழப்பம் நீடித்தது. மனுத்தாக்கலுக்கு 2 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், ஒருவழியாக நேற்று 27 தொகுதிகளுக்கு வேட்பாள பட்டியல் வெளியானது. ஆனால் மேலுார் இடம் பெறவில்லை. தமிழக காங்., தலைவர்களுக்குள் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியாததால் கடைசி வரை மேலுாருக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
மேலுார் தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலில் தற்போதைய எம்.பி., மாணிக்கம் தாகூரின் உறவினர் ரவிச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அத்தொகுதி அ.தி.மு.க.,வுக்கு சாதகம் என்பதால் இம்முறை நகர் பகுதியில் வடக்கு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என காய் நகர்த்தினார். அதை சிட்டிங் எம்.எம்.ஏ.,வான நகர் செயலாளர் தளபதிக்கு மீண்டும் தி.மு.க., ஒதுக்கியது.
ஆனால் 'இத்தொகுதியை காங்.,க்கு ஒதுக்க கோரி தேசிய தலைவர் கார்கே வரை பேசுவேன்' என மாணிக்கம் தாகூர் 'கறார்' காட்டினார். ஆனால் தி.மு.க., அதற்கு 'செக்' வைத்துவிட்டது. 28 தொகுதிகள் அறிவிப்பில் மேலுார் இடம் பெற்றதால் அங்கு போட்டியிட மாநிலத் தலைவர் ஆதரவாளரான மேலுாரை சேர்ந்த காங்., மனித உரிமை கழகம் மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் முயற்சித்தார். அதேநேரம் காங்., மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவாளர்களான காங்., ஓ.பி.சி., பிரிவு நிர்வாகி நித்யபிரியா, சிவகங்கை சி.ஆர்.சுந்தரராமன், முன்னாள் இளைஞரணி நிர்வாகி மேலுார் ராம்சுந்தர் ஆகியோர் வேட்பாளராக்க முட்டி மோதினர். தமிழக காங்., தலைவர்களுக்குள் ஒற்றுமையின்றி இந்த மோதல் போக்கு கடைசி நிமிடம் வரை நீடித்ததால் வேட்பாளர் பட்டியலில் இருந்து மேலுார் கழற்றிவிடப்பட்டுள்ளது. இது தனியாக அறிவிக்கப்படும் என்றனர்.
