/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு காளை கொம்பில் ரப்பர் குப்பி; மாற்றி யோசிக்க அமைச்சர் 'அட்வைஸ்'
/
ஜல்லிக்கட்டு காளை கொம்பில் ரப்பர் குப்பி; மாற்றி யோசிக்க அமைச்சர் 'அட்வைஸ்'
ஜல்லிக்கட்டு காளை கொம்பில் ரப்பர் குப்பி; மாற்றி யோசிக்க அமைச்சர் 'அட்வைஸ்'
ஜல்லிக்கட்டு காளை கொம்பில் ரப்பர் குப்பி; மாற்றி யோசிக்க அமைச்சர் 'அட்வைஸ்'
ADDED : டிச 28, 2024 05:22 AM
மதுரை : 'ஜல்லிக்கட்டில் காளை கொம்பில் ரப்பர் குப்பி பொருத்துவதற்கு பதிலாக மாற்று முறையை கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்த வேண்டும்' என அமைச்சர் மூர்த்தி கூறினார்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், விழாக் குழுவினருடனான ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், எஸ்.பி. அரவிந்த், டி.ஆர்.ஓ. சக்திவேல் கலந்து கொண்டனர்.
கலெக்டர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பதிவு நடைபெறும். முன்பதிவுக்கும் களத்தில் வரும் காளைகளின் போட்டோவுக்கும் வேறுபாடு உள்ளதால் போட்டோ மாற்றம் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜாதி பெயரில் காளைகளை அறிவிக்கக்கூடாது, உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் மூர்த்தி கூறுகையில் ''போட்டியில் பங்கேற்கும் காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் வைக்க கால்நடைத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
ஒவ்வொரு காளைகளின் கொம்பும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால் ரப்பர் குப்பிகள் வைக்க இயலாது. அதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும்'' என்றார்.

