ADDED : அக் 16, 2024 04:37 AM
மதுரை : மதுரையில் சாத்தையாறு ஓடையில் இருந்து வெளியேறிய தண்ணீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான மாட்டுத்தாவணி டி.எம்.,நகர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் பெய்த கனமழையில் சாத்தையாறு ஓடையில் வெளியேறிய மழைநீர் டி.எம்.நகர் பகுதிக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. நேற்று அமைச்சர் மூர்த்தி அங்கு சென்று ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், '' டி.எம்.நகர் பகுதி சாத்தையாறு, ஈச்சமடை கால்வாய்கள் சேருமிடம். இப்பகுதி உட்பட மாநகராட்சிக்குட்பட்ட 13 கி.மீ.,க்கு தடுப்புச் சுவர் தேவையாக உள்ளது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுவதை தடுக்கலாம். மதுரையில் மழைப் பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி, பொதுப்பணி, நீர்வளத்துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.
மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர் வாசுகி, மாநகராட்சி, பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.