மதகு அணைப்பாலம் மூடல்; மாற்றுவழி கோரும் எம்.எல்.ஏ.,
மதகு அணைப்பாலம் மூடல்; மாற்றுவழி கோரும் எம்.எல்.ஏ.,
ADDED : பிப் 10, 2026 06:05 AM
திருப்பரங்குன்றம்: ''விரகனுார் மதகு அணை சீரமைப்புக்காக பாலம் மூடப்படுவதால், மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும்'' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி விரகனுாரில் வைகை ஆற்றின் குறுக்கே மதகு அணை உள்ளது.
இதனை பராமரிக்க உள்ளதால், அருகே உள்ள பாலத்தில் பிப்.12 முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மதகுகள், சாலை, பூங்காவை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது: மதகு அணை 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. அருகிலுள்ள அணை மதகுகள், பூங்கா, சாலைகள் பழுதடைந்துள்ளன.
இவற்றை சரிசெய்ய 3 முறை சட்டசபையில் பேசினேன். முதற்கட்டமாக ரூ.33 கோடியில் மதகுகளை மாற்றும் பணி துவங்க உள்ளது. அதன் பின் பூங்கா, சுற்றுலா மாளிகை சீரமைக்கப்படும்.
இந்தப் பாலத்தை தினமும் 5 ஆயிரம் பேர் வரை பயன்படுத்துகின்றனர். ஆற்றைக் கடக்க வேறுபாதை இல்லாததால் மாற்று வழி ஏற்படுத்திய பின், சீரமைப்பு பணிகளை துவங்க வேண்டும்.
அ.தி.மு.க., அரசு அமைந்தவுடன் மதகு அணையை முழுமையாக சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவோம் என்றார்.
