'‛மோடி' எழுத்து வடிவ ஆவணம்: நீதிமன்றத்தில் வழக்கு
'‛மோடி' எழுத்து வடிவ ஆவணம்: நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : செப் 22, 2026 02:54 AM
மதுரை: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நுாலகத்தில் பாதுகாக்கப்படும் 'மோடி' எழுத்து வடிவ ஆவணங்களை தமிழில் மொழி மாற்றம் செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசிடம் விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ராயமுண்டன்பட்டி ஜீவ குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தஞ்சாவூரில் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நுாலகமானது, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் (535---1675) அரச அரண்மனை நுாலகமாக துவங்கப்பட்டது. பின் இரண்டாம் சரபோஜி மன்னரால் (1908--1932) மேம்படுத்தப்பட்டது. கடைசி ராணியின் மறைவிற்கு பின், பொது நுாலகமாக மாற்றப்பட்டது. தமிழக அரசு 1918 ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இங்கு பனை ஓலை மற்றும் காகிதத்திலான 70 ஆயிரம் கையெழுத்து பிரதி தொகுப்புகள் உள்ளன.
மராட்டியர் ஆட்சி காலத்தில் ஆவணங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகளை பராமரிக்க பல்வேறு எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. காகிதத்தில் எழுத தேவநாகரி எழுத்துமுறை, பனை ஓலைச் சுவடிகளுக்கு தெலுங்கு, தமிழ் எழுத்துமுறைகள் பயன்படுத்தப்பட்டன. தவிர 'மோடி' என அழைக்கப்படும் மற்றொரு சிறப்பு எழுத்துமுறை மராட்டியர் காலத்தில் அலுவலக ஆவணங்கள், நிர்வாக கணக்குகள், கடித பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
'மோடி' என்பது மராத்தி மொழியுடன் தொடர்புடைய, விரைவாக எழுத நிர்வாக ஆவணங்களை தயாரிப்பதற்கு ஏற்ற வரலாற்று சிறப்புமிக்க, தொடர்ச்சியாக எழுதப்படும் எழுத்துமுறை.இந்நுாலகத்தில் பாதுகாக்கப்படும் 'மோடி' ஆவணங்கள் தஞ்சாவூர் மராட்டிய அரசின் நிர்வாகம், சமூகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றை புரிந்துகொள்வதற்கான முக்கியத் தகவல் ஆதாரமாகும். ஆட்சியாளர்கள், மக்களால் மேற்கொள்ளப்பட்ட விவசாயம், இசை, கல்வி, வணிகம், பொதுப்பணிகள் மற்றும் பிற செயல்பாடுகள் தொடர்பான தகவல்களும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. 'தஞ்சாவூர் ராஜ ஆவணங்கள்' என அழைக்கப்படும் இந்த 'மோடி' ஆவணங்களை பாதுகாக்க, வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக அவற்றின் உள்ளடக்கங்களை வெளிக்கொணர இந்திய வரலாற்று ஆவண ஆணையம் 1946 ல் பரிந்துரைத்தது.
'மோடி' ஆவணங்களை எழுத்து வடிவில் படியெடுத்து, மொழிபெயர்த்து, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படாவிடில், வரலாற்று தகவல்கள் தற்போதைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு கிடைக்காமல் போய் விடும்.
இந்நுாலகத்தில் பாதுகாக்கப்படும் 'மோடி'ஆவணங்களை படியெடுக்க, அந்த எழுத்துமுறையில் நிபுணத்துவம் கொண்டவர்களை நியமிக்க வேண்டும். தமிழில் மொழி மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சேகர் ஆஜரானார்.
நீதிபதிகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை, தொல்லியல்துறை முதன்மை செயலர்களிடம் விபரம் பெற்று அரசு தரப்பு வழக்கறிஞர் நவ.16 ல் தெரிவிக்க உத்தரவிட்டனர்.
