ADDED : அக் 18, 2024 05:42 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். மழைகாலங்களில் மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகளின் அலைபேசி எண்களை அறிவிப்பாக கிராமங்களில் வைக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். பணிகளை அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
எழுமலை
எழுமலை பேரூராட்சியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார். சொத்து வரி, குடிநீர் கட்ட ணங்களை அந்தந்த காலக்கெடுவிற்குள் வசூல் செய்ய அறிவுறுத்தினார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளில் இருந்து உரம், மண்புழு உரம் மற்றும் கலவை உரங்களை அப்பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கும் பணிகளை பார்வையிட்டார்.
மக்காத கழிவுகளை தரம் பிரித்து சேகரிக்கவும், காய்கறி தோட்டம் வளர்க்கவும் ஆலோசனை வழங்கினார். பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், செயல் அலுவலர் ஜெயமுருகன், பணியாளர்கள் உடன் இருந்தனர்.