/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருளில் மூழ்கிய நாவினிபட்டி நெடுஞ்சாலை
/
இருளில் மூழ்கிய நாவினிபட்டி நெடுஞ்சாலை
ADDED : ஏப் 07, 2025 04:55 AM

மேலுார்: மேலுார் மாநில நெடுஞ்சாலையில் நாவினிபட்டிமில் 31 தெருவிளக்குகள் பழுதானதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
மேலுார் - திருப்பத்துார் ரோட்டில் நாவினிபட்டி ஊராட்சி துவங்குகிறது. இந்த மாநில நெடுஞ்சாலையில் 2023 ல் தமிழக அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் இருந்து ரூ. 119 கோடியில் புதிய பாலம், ரோட்டின் தரத்தை உயர்த்தி 7 ஆண்டுகள்பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதில் நாவினிபட்டி ரோட்டின் இரு புறமும் சோலார் மின் இணைப்பு மூலம் அமைக்கப்பட்ட 31 தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதாகி கிடக்கின்றன. வெளிச்சம் இல்லாததால் அச்சமுடன் நடமாடுகின்றனர்.
அப்பகுதி பீர்முகமது கூறியதாவது: தெரு விளக்குகள் பழுதானதால் கும்மிருட்டாக உள்ளது. அதனால் வீடுகளில் திருட்டு, ரோட்டில் நடந்து செல்லும் போது செயின் பறிப்பு நடப்பதால் மக்கள் அச்சத்துடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வேலை, வெளியூர் செல்பவர்கள் இரவு நேரம் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தவிர தினமும் விபத்து ஏற்படுகிறது. ஏழு ஆண்டுகள் பராமரிக்க ஒப்பந்தம் போட்ட நிறுவனம் பராமரிக்கவில்லை. அதனால் ஊராட்சி நிர்வாகம் பலமுறை ஒப்பந்ததாரிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் தெரு விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஒரு வாரத்திற்குள் தெரு விளக்குகள் சரி செய்யப்படும் என்றனர்.

