UPDATED : மே 11, 2026 09:34 PM
ADDED : மே 11, 2026 09:31 PM

மேலுார்: மேலுார் நெடுஞ்சாலையில் நாவினி பட்டியில் தெருவிளக்குகள் மற்றும் ஹைமாஸ் விளக்கு பழுதானதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
மேலுாரில் இருந்து திருப்பத்துார் ரோடு நாவினிப்பட்டி ஊராட்சியில் துவங்குகிறது. இந்த நெடுஞ்சாலையில் ரூ. 119 கோடியில் புதிய பாலம் மற்றும் ரோட்டின் தரத்தை உயர்த்தி 7 ஆண்டுகள் பராமரிக்க தனியார் நிறுவனத்தினரிடம் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் நாவினிபட்டி ரோட்டின் இருபுறமும் தெரு விளக்குகள், அரசு கல்லுாரி முன்பு ஹைமாஸ் விளக்கு பழுதானதால் மக்கள் அச்சமுடன் இருட்டில் நடமாடுகின்றனர்.
அப்பகுதி பீர்முகமது கூறியதாவது: தெரு விளக்குகள் எரியாததால் சாலையில் இருட்டாக உள்ளது. வீடுகளில் திருட்டு, வழிப்பறி நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வெளியூர் செல்வோர் இரவு நேரம் வீடு திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலுாரில் இருந்து நெடுஞ்சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதானதால் தினமும் விபத்து ஏற்படுகிறது.
ஏழு ஆண்டுகள் பராமரிக்க நிதிபெற்ற ஒப்பந்ததாரர் பராமரிக்க மறுக்கிறார். அவரிடம் ஊராட்சி நிர்வாகம், பொது மக்கள் எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனே தெரு விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் கிஷோர் கூறுகையில், ''விரைந்து பழுது நீக்கி தெருவிளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்'' என்றார்.
