மதுரைக்குத் தேவை ஜி.எஸ்.டி.ஏ.டி., அமர்வு மூன்றாண்டுகளாக இடம் கிடைக்கவில்லை
மதுரைக்குத் தேவை ஜி.எஸ்.டி.ஏ.டி., அமர்வு மூன்றாண்டுகளாக இடம் கிடைக்கவில்லை
ADDED : செப் 23, 2026 03:13 AM
மதுரை:தொழில் துறையினருக்காக 2023 ல் மதுரைக்கு அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு (ஜி.எஸ்.டி.ஏ.டி.,) தீர்ப்பாய அமர்வை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவையிலும் புதுச்சேரியில் தனியாக ஜி.எஸ்.டி.ஏ.டி., அமர்வு அமைக்கப்படும் என மத்திய அரசு 2023ல் அறிவித்தது.
மூன்றாண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது வரை மதுரை அமர்வுக்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றனர் தொழிற்துறையினர்.
அவர்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., தொடர்பான மதிப்பீடு, வரி கோரிக்கை, அபராதம், உள்ளீட்டு வரி வரவு, பணத்தை திரும்பத் தருதல் (ரீபண்ட்) உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தொழில் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுவது போல் அருகிலேயே மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் செயல்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
இதனால் நேரம், பயணச்செலவு, நிர்வாகச் சுமையை குறைத்து தொழில் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த முடியும்.
மதுரையில் ஜி.எஸ்.டி.ஏ.டி., அமர்வு செயல்பாட்டுக்கு வந்தால் தென் மாவட்டங்களின் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் பயன் கிடைக்கும். இந்த அமைப்பின் மூலம் ஜி.எஸ்.டி., தொடர்பான மேல்முறையீடுகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு சாதகமான சூழல் உருவாகும்.
மூன்றாண்டுகளாகியும் மதுரையில் இதுவரை இடத்தேர்வு அமையவில்லை. அமர்வு அமைய வேண்டுமென தமிழக அரசு நினைத்தால் முதல் கட்டடமாக வாடகை கட்டடத்தை கூட தேர்வு செய்து ஒப்படைக்கலாம். சமீபத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி., கமிஷனர் தலைமையிலான கூட்டத்தில் தொழில்துறையினர் இந்த வேண்டுகோளை வைத்தோம். மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசு ஜி.எஸ்.டி.ஏ.டி., அமர்வுக்கான இடத்தை விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
