/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை நடுவே குடியிருக்கும் 'நியூ எல்.ஐ.ஜி., காலனி'
/
குப்பை நடுவே குடியிருக்கும் 'நியூ எல்.ஐ.ஜி., காலனி'
குப்பை நடுவே குடியிருக்கும் 'நியூ எல்.ஐ.ஜி., காலனி'
குப்பை நடுவே குடியிருக்கும் 'நியூ எல்.ஐ.ஜி., காலனி'
ADDED : ஜூன் 28, 2025 12:55 AM

மதுரை: மதுரை கே.கே.நகர், நியூ எல்.ஐ.ஜி., நகர் குடியிருப்பு பகுதி குப்பைகளின் கூடாரமாக மாறி வருகிறது. இப்பகுதி மக்கள்அடிப்படை வசதிகள் பாதி கிடைத்தும், பாதி கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இப்பகுதியின் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஈஸ்வரர் ராவ், துணைத்தலைவர் அரங்கண்ணன், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் குமரப்பன், செயற்குழு உறுப்பினர்கள் சரோஜா, ராஜேஸ்வரி, ரத்தினப்பிரியா, கவுரவ ஆலோசகர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
குப்பையின் கூடாரம்
1976ல் துவங்கிய நியூ எல்.ஐ.ஜி., காலனியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொடக்கம் முதல் செயல்பட்ட பூங்கா, குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளது. இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. காதலர்கள் அத்துமீறுகின்றனர். நள்ளிரவில் மருத்துவக் கழிவுகள், மார்க்கெட் கழிவுகளை கொட்டுகின்றனர்.
ஆரம்பகால நீராதாரகிணறு தற்போது குப்பைத் தொட்டியாகிவிட்டது. தெர்மக்கோல், காகித அட்டைகள் என எளிதில் தீப்பற்றும் பொருள்களால் நிரம்பியுள்ளது. அதனை தற்காலிகமாக தகர ஷீட்டைப் பயன்படுத்தி மூடியுள்ளனர். நிரந்தர தீர்வு வேண்டும். மழைநீர் வடிகாலை, தனியார் ஓட்டல் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வண்டியூர் கண்மாய்க்கு செல்ல வேண்டிய நீர் இங்கு தேங்கி நிற்கிறது.
அடிப்படை வசதியில்லை
ஆண்டுக்கு ரூ.900 வரி கட்டியும் தண்ணீர் வராததால் தண்ணீர் லாரிகளை எதிர்பார்க்கிறோம். ஜல் ஜீவன் திட்டத்தில் இன்னும் சில வீடுகளுக்கு இணைப்பு தரவில்லை. புதிய எல்.இ.டி., விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ரோந்து போலீசார் எட்டிப் பார்ப்பதே இல்லை.
இக்காலனிக்கு வரும் டவுன் பஸ்கள் மாற்று வழித்தடத்தில் செல்கின்றன. எனவே ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளோம். இது பற்றி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
உணவு, கடிதம் டெலிவரி செய்ய வருவோரை மட்டுமின்றி உள்ளூர் பகுதியினரையும் தெருநாய்கள் துரத்துகின்றன. விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.ஐந்தாண்டுகளுக்கு முன் திறந்த நுாலகத்திற்கு புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்த நுாலகம் மானகிரியில் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது. அதனை இங்கு இடமாற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு கூறினர்.