ADDED : ஜன 07, 2025 05:03 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் அடிக்கடி திருட்டு தொடர்கிறது.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஹாக்கி மைதானத்தை சுற்றி வகுப்பறை கட்டடங்கள், வட்டார வள மைய அலுவலகம், கழிப்பறைகள் உள்ளன. ஓராண்டாக இப்பள்ளியில் இரவு காவலர் இல்லை. 8 கண்காணிப்பு கேமராக்கள் தேர்வு விடுமுறையில் திருடு போனது.
வகுப்பறை கட்டட ஜன்னல்களின் கான்கிரீட் சிலாப்புகளை உடைத்து, அதில் இருக்கும் கம்பிகளை திருடிச் செல்கின்றனர். இரவில் உள்ளே வரும் நபர்கள் மது, கஞ்சா குடிக்கும் பார் போன்ற, பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர். கழிப்பறை கதவை உடைத்து கோப்பைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பள்ளியில் கணினி உள்பட சாதனங்கள், ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே இரவு காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

