/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
/
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : பிப் 04, 2024 03:41 AM
மதுரை : கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அச்சங்க மாநில தலைவர் முருகையன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:சங்க அவசர மத்திய செயற்குழு கூட்டம் பெரம்பலுாரில் நடந்தது. பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தால் பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின் பணிப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். இளநிலை / முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்ற விதி திருத்த அரசாணையை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர் இடையேயான பணி முதுநிலை பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிப்.,13 ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், பிப்.,22 முதல் தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம், பிப்.,27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.