/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருப்பணசுவாமி கோயிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
கருப்பணசுவாமி கோயிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஆக 04, 2025 04:56 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முதலைக்குளம் கருப்ப சுவாமி கோயிலுக்கு அறநிலையத்துறை சார்பில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
இங்குள்ள கண்மாய் கரையில் பிரசித்தி பெற்ற கருப்பண சுவாமி கோயில் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்கு சென்றது.
கோயிலில் போதிய வசதிகள் இல்லை என்பது பக்தர்களின் குறையாக உள்ளது. அப்பகுதி கனிச்செல்வம் கூறியதாவது:
கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கோயிலுக்கு செல்லும் ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
ஏராளமான பக்தர்கள் டூவீலர், காரில் வருகின்றனர். கோயிலுக்கு மானியமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 'பார்க்கிங்' வசதி செய்து தர வேண்டும். கோயிலுக்குள் ஆங்காங்கே கடைகள் இடையூறாக அமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி அப்பகுதிக்குள் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
இது குறித்து கோயில் அதிகாரியிடம் கேட்டபோது, 'மானிய நிலம் நன்செய் நிலமாக உள்ளதால் 'பார்க்கிங்' அமைக்க இயலாது. வேறு இடத்தில் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. கடைகளை முறைப்படுத்தி அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.