ADDED : ஆக 03, 2025 05:17 AM

வாடிப்பட்டி: மேலமாத்துார் ஊராட்சி காமாட்சிபுரம் நிலையூர் கால்வாயில் பழுதடைந்த பழைய பாலத்தால் விபத்து அபாயம் உள்ளது.
திருப்பரங்குன்றம் ஒன்றியம் காமாட்சிபுரத்தில் நாகமலை அடிவாரத்தில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள நிலையூர் கால்வாயை கடந்துதான் கிராமத்திற்கு தினமும் சென்று வருகின்றனர். அரசு பஸ் இயக்கப்படுகிறது. குறுகிய பாலத்தில் அடிப்பகுதி கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.
இதனால் இவ்வழியாக செல்லும் குடிநீர் குழாய்களும் சேதமடைகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் இப்பாலம் கட்டப்பட்டபோது அருகே கட்டிய தாராப்பட்டி பாலம் சேதமடைந்த நிலையில் இரு ஆண்டுகளுக்குமுன் புதிதாக கட்டப்பட்டது.
காமாட்சிபுரம் நாகேந்திரன் கூறுகையில், ''வைகை பாசனம் உள்ள நிலையூர் கால்வாயில் தண்ணீர் சென்றால் பாலத்தை கடந்து செல்ல முடியாது. போக்குவரத்து பாதிக்கும். இறுதி ஊர்வலம் கூட பாலம் வழியாகத்தான் நடக்க வேண்டும். எனவே, புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

