/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையை ஆட்டிப்படைத்த ஒன்றரை மணி நேர மழை
/
மதுரையை ஆட்டிப்படைத்த ஒன்றரை மணி நேர மழை
ADDED : மே 17, 2025 01:11 AM

மதுரை: மதுரையில் நேற்று மாலை 4:00 முதல் 5:30 மணி வரை காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.
மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாசலில் இருந்த வேப்பமரம் முறிந்து விழுந்ததால் மாலை 5:00 மணி முதல் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மாட்டுத்தாவணி பிரஸ் காலனி, மேலப்பொன்னகரம் பாரதியார் தெருவில் இருந்த பழமையான ஆலமரம், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். தத்தனேரி உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்த மின்கம்பம் வளைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம் பறக்கும் பாலத்தின் மழைநீர் செல்லும் வடிகால் குழாய் வழியாக மழைநீர் அருவி போல கீழ்ப்பகுதி ரோட்டில் கொட்டியதால் வாகனஓட்டிகள் திணறினர். அய்யர்பங்களா, வண்டிக்காரன் ரோடு, ரிசர்வ்லைன் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாலை 5:00 முதல் 6:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட்டது. செல்லுார் மெயின் ரோடு திருமண மண்டபங்களின் கட்டப்பட்டிருந்த பெரிய பிளக்ஸ் பேனர்கள் கீழே விழுந்ததால் திருவாப்புடையார் கோயிலுக்கு செல்லும் வழி தடைபட்டது.
பகலிலேயே மேடு பள்ளமான ரோட்டில் பரிதவித்து செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் தேங்கிய மழைநீரை அறியாமல் விழுந்து எழுந்து சென்றனர்.
மழையளவு
நேற்று முன்தினம் சராசரியாக 8.35 மி.மீ., மழை பெய்தது. அதிகபட்சமாக ஏர்போர்ட்டில் 67.2 மி.மீ., மழை பதிவானது. திருமங்கலத்தில் 21.4 மி.மீ., உசிலம்பட்டி 15, மேலுார் 11.2, சாத்தையாறு அணை 10, கள்ளந்திரி 5.2, இடையபட்டி 5, சிட்டம்பட்டி 4.6, மதுரை வடக்கு 4.2, தல்லாகுளம் 3.4, எழுமலை 3.4, விரகனுார் 2, பேரையூர் 1.4 மி.மீ., மழை பதிவானது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114.35 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 1618 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 3 கனஅடி, வெளியேற்றம் 100 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 53.44 அடி (மொத்த உயரம் 71 அடி), நீர் இருப்பு 2477 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 10 கனஅடி, வெளியேற்றம் 72 கனஅடி. சாத்தையாறு அணை நீர்மட்டம் 20.6 அடி (மொத்த உயரம் 29 அடி), நீர் இருப்பு 28.94 மில்லியன் கனஅடி.