ADDED : மார் 29, 2026 11:24 PM

பள்ளத்தை மூடுங்க
காமராஜர் ரோடு கான்வென்ட் சந்தையில், கூட்டுக் குடிநீர் குழாய் பாதிக்க தோண்டிய குழிகளை, பணி முடிந்து பல நாட்களாகியும் சிலாப் கொண்டு மறைத்துள்ளனர். அதிகாரிகள் குழிகளை முறையாக மூடி, ரோடு அமைக்க வேண்டும்.
- உஷா, காமராஜர் ரோடு.
நடைபாதை ஆக்கிரமிப்பு
தெற்கு வாசல் சின்னக்கடை வீதி, தெற்கு மாரட் வீதி முழுவதும் கடைகள் முன்பு கனரக வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். டூவீலர்களால் நடைபாதையையும் விட்டு வைக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற போலீசாரின் நடவடிக்கை தேவை.
- செல்வம், தெற்கு வாசல்.
கழிவுநீர் வெளியேற்றம்
செல்லுார் - குலமங்கலம் இணைப்பு ரோட்டில் உருவாகியுள்ள பள்ளத்தில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. அவ்வழியாக செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளத்தை மூட வேண்டும்.
- அபுபக்கர், செல்லுார்.
டிரான்ஸ்பார்மரை அகற்றுங்க
தாசில்தார் நகர், முல்லை தெரு, செந்தில்நாதன் குறுக்குத் தெருவில் பழைய டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் அடிக்கடி தீப்பொறி விழுவதால் வீட்டில் வசிப்போருக்கு காயம் ஏற்படுகிறது. டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் நிறுவ வேண்டும்.
- வெங்கடேச பாண்டியன், தாசில்தார் நகர்.
தெருவிளக்கு எரியல
பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில், தெரு விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை. திருட்டு அச்சத்தால் பெண்கள், குழந்தைகள் இரவில் அவ்வழியாக செல்ல அஞ்சுகின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
- சங்கரன், பழங்காநத்தம்.
குழாய் உடைத்த மாநகராட்சி
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பாதாள சாக்கடை பணியின் போது, 6 வீடுகளுக்கான குடிநீர் குழாய், மண் அள்ளும் இயந்திரத்தால் சேதப்படுத்தப்பட்டது. அந்த வீட்டு உரிமையாளர்களிடமே பணம் பெற்று சரி செய்த நிலையில் தண்ணீர் குறைவாக வருகிறது. மாநகராட்சி தவறுக்கு மக்களிடம் வசூலிக்கலாமா.
- சண்முகசுந்தரம், வடக்கு ஆவணி மூல வீதி.
மருத்துவமனையில் விரிசல்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு கட்டட கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், பணியாளர்கள் பெயர்ந்து விழுவதால் அச்சத்துடன் சிகிச்சை பெறுகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஸ்வரூபம், தென்கரை.
