/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வாய்ப்பு
/
வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வாய்ப்பு
ADDED : ஜூலை 10, 2025 03:03 AM
மதுரை: தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை சார்பில் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் அங்குள்ள தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 வயது, இதர பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழக கல்லுாரிகளில் படித்திருக்க வேண்டும். எந்தப் பணியிலும் இருக்கக் கூடாது. அரசு, பிற முகமைகள் மூலம் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
மாற்றுத்திறனாளிகள் எனில் பதிவு செய்து ஓராண்டு ஆகி இருக்க வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவோர் மீண்டும் விண்ணப்பிக்க வருகை புரிய தேவையில்லை. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.29 வரை அலுவலகத்தில் வழங்கலாம்.
உதவித்தொகை பெறுவோர் ஓராண்டு முடிந்திருந்தால், வேலைவாய்ப்பு அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுயஉறுதிமொழி ஆவணம் (அபிடவிட்), ஆதார் அட்டையுடன் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுக வேண்டும் என துணை இயக்குனர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.