/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அ.தி.மு.க.,வினரிடம் பழனிசாமி மகிழ்ச்சி அமித்ஷா முடிவு செய்தால் வெற்றிதான் என உற்சாகம்
/
மதுரை அ.தி.மு.க.,வினரிடம் பழனிசாமி மகிழ்ச்சி அமித்ஷா முடிவு செய்தால் வெற்றிதான் என உற்சாகம்
மதுரை அ.தி.மு.க.,வினரிடம் பழனிசாமி மகிழ்ச்சி அமித்ஷா முடிவு செய்தால் வெற்றிதான் என உற்சாகம்
மதுரை அ.தி.மு.க.,வினரிடம் பழனிசாமி மகிழ்ச்சி அமித்ஷா முடிவு செய்தால் வெற்றிதான் என உற்சாகம்
ADDED : செப் 05, 2025 03:40 AM
மதுரை: 'சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி என் தலைமையில் அமையும். அமித்ஷா முடிவு செய்துவிட்டால் அது வெற்றிதான்' என மதுரை அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் பொதுச்செயலாளர் பழனிசாமி மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பழனிசாமி எழுச்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்ட பயணத்தில் செப்.,1 முதல் 4 நாட்கள் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். மாலையில் மட்டுமே பயணம் செய்யும் வகையில் அவரது நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஓட்டலில் 3 நாட்கள் தங்கி கட்சி நிர்வாகிகளையும், பா.ஜ.,வினரையும் சந்தித்து பேசினார்.
மதுரையில் முகாமிட்டிருந்தபோதுதான் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வமும், தினகரனும் விலகுவதாக அறிவித்தனர்.
கூட்டணியில் தனக்கு இருவரும் இடையூறாக இருப்பார்கள், உட்கட்சி குழப்பம் ஏற்படும் என பழனிசாமி கருதியிருந்த நிலையில், பா.ஜ.,வின் 'கண்டுக்கொள்ளாமை'யால் அவர்களாக வெளியேறியது பழனிசாமிக்கு நிம்மதியை தந்துள்ளது. அதேசமயம் செங்கோட்டையன் 'தனி ஆவர்த்தனம்' செய்து பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இதையெல்லாம் மதுரை நிர்வாகிகளிடம் ஆலோசித்த பழனிசாமி, 'கட்சிப்பணிகளில் கவனம் செலுத்துங்கள். என் தலைமையில்தான் ஆட்சி அமையும். அதை அமித்ஷாவே சொல்லிவிட்டார். அதனால்தான் அண்ணாமலையும் என்னை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும். அது நம் கடமை என பேசிவருகிறார். அமித்ஷா முடிவு செய்துவிட்டால் அது வெற்றியில்தான் முடியும்' என உற்சாகமாக பேசினார்.
நேற்று மாலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளிலும், தேனி ஆண்டிப்பட்டி தொகுதியிலும் பயணம் மேற்கொண்டார். முன்னதாக நேற்று காலை மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்ட பழனிசாமி, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மதியமே மதுரைக்கு திரும்பினார்.