ADDED : ஏப் 27, 2026 11:36 PM
சோழவந்தான்: காடுப்பட்டி ஊராட்சி அலுவலக வளாகம் குப்பை கோடவுனாக மாறிவருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
இங்கு நாடக மேடை அருகே ஊராட்சி அலுவலகம், துணைசுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், தொடக்கப்பள்ளி சுற்றிலும் அமைந்துள்ளது. இதன் நடுவே காலியிடத்தில் பழைய இரும்புக் குழாய்கள், உடைந்த குடிநீர் தொட்டி, பேட்டரி குப்பை வண்டி நிறுத்தப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
உடைந்த குடிநீர் தொட்டியில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பல குழாய்கள் துருப்பிடித்திருப்பதால் மாணவர்கள் விளையாடும் போது விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. பணி நிமித்தமாக வரும் பலர் வளாகம் துாய்மையற்று இருப்பதைக் கண்டு முகம் சுளிக்கின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
