ADDED : ஜன 19, 2026 05:24 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்து சிரமப்படுகின்றனர்.
இங்கிருந்து தினமும் ஏராளமான பயணிகள் மதுரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதால் எப்போதும் பஸ்ஸ்டாப்பில் கூட்டம் இருக்கும்.
இதையடுத்து 1.50 கோடி மதிப்பில் வணிக வளாகத்துடன் புதியதாக அம்பேத்கர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, ஜன. 12ல் திறக்கப்பட்டது.
68 வது சுதந்திர தினத்தில் மாநில அளவில் 2வது சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட நிதியில் கட்டப்பட்டது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன.
ஓராண்டாகியும் அவற்றை சீரமைக்காததால், இரு பஸ் ஸ்டாப்களிலும் இருக்கைகள் இல்லை. பஸ்சுக்காக காத்திருப்போர் அமர்ந்திருக்க வழியின்றி நீண்ட நேரம் கால்கடுக்க நிற்கின்றனர். சிலர் சூடான 'டைல்ஸ்' படிகளில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.
வயதானோர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் அமர வழியின்றி நிழல் தேடி சிரமப்படுகின்றனர்.
இருக்கைகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
