ADDED : ஏப் 02, 2025 02:49 AM
திண்டுக்கல்:''தமிழகத்தில் ஹிந்து வன்னியர்களைப் போல் கிறிஸ்தவ வன்னியர்களையும் எம்.பி.சி., பட்டியலில் இணைத்திட வேண்டும். இல்லையேல் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,க்கு ஆதரவு அளிக்க மாட்டோம்'' என, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி கூறினார்.
அவர் கூறியதாவது :
கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த மக்கள் பொருளாதாரத்திலும், சமூகத்திலும், வேலை வாய்ப்புகளிலும் மிகவும் பின் தங்கி உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்த கிறிஸ்தவ வன்னியர்களை தமிழக அரசு பட்டியலில் இருந்து இடை நீக்கம் செய்து விட்டது. இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு நடைமுறைப்படுத்தப்பட்ட எம்.பி.சி., பட்டியலில் இணைத்திட வேண்டும். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2021 தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்தவ வன்னியர்கள் மிகவும் பிற்படுத்த பட்டியலில் இணைக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தார். இதனை நிறைவேற்றிட வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு தரமாட்டோம்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி மே 24 ல் மாநாடு நடத்தி் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். இதன் பின் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்க உள்ளோம் என்றார்.

