ADDED : செப் 18, 2026 01:01 AM
மதுரை: சென்னை இயக்குநர் அலுவலகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் (எஸ்.ஆர்.,) மாதக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இயக்குநரகம் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 40 மேல்நிலை, 20 உயர்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.
கள்ளர் சீரமைப்பு பள்ளி பட்டதாரி, உயர்நிலை தலைமையாசிரியர்கள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலும், முதுகலை ஆசிரியர், தலைமையாசிரியர் இயக்குநர் கட்டுப்பாட்டிலும் உள்ளனர்.
முதுகலை ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு பட்டியல் தயாரித்தல் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் எஸ்.ஆர்.,கள் சென்னை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாதக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கல்வித்துறையில் பி.ஜி., ஆசிரியர், தலைமையாசிரியரின் எஸ்.ஆர்., பணிகளை சி.இ.ஓ.,க்களே மேற்கொள்கின்றனர். ஆனால் கள்ளர் சீரமைப்பு துறையில் மதுரையில் இணை இயக்குநர் அலுவலகம் இருந்தும், சென்னை இயக்குநர் அலுவலகத்திற்கு தேவையின்றி எஸ்.ஆர்.,கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் சம்பள உயர்வு. சரண் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்ற பலன்களையும் உரிய நேரத்தில் ஆசிரியர்கள் பெற முடியவில்லை. இப்பணிகளை மதுரை இணை இயக்குநர் அலுவலகத்தில் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
