ADDED : ஜன 16, 2025 05:14 AM
மதுரை: மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ஜான் பென்னிகுவிக் சிலை உள்ளது. முல்லைப்பெரியாறு அணையை கட்டியஅவரது பிறந்தநாளை முன்னிட்டு முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு மாநில இளைஞரணி தலைவர் அருண், தென்மண்டல தலைவர் மாணிக்கவாசகம், மாடக்குளம் பாசன சங்க தலைவர் மாரிச்சாமி, இருபோக பாசன சங்க நிர்வாகி திருப்பதி, மாவட்ட பொருளாளர் செல்லம், பேரையூர் முத்து மீரான், உக்கிர பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரை தேக்க, பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்த தடையாக உள்ள மரங்களை அகற்ற வேண்டும். அணையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அன்னை தமிழ் படகுகளை இயக்க வேண்டும். அணையின் நிர்வாக பொறுப்புகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும், அங்குள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அணைக்கு செல்லும் டோல்கேட், வள்ளக்கடவு டோல்கேட்டின் நிர்வாக பொறுப்புகள் தமிழக அரசு கட்டுப்பாட்டில் வரவேண்டும். இதற்கு தடையாக உள்ள மத்திய அரசு அணை பாதுகாப்புச் சட்டத்தில் விலக்களித்து, 2014 முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த கேரள, தமிழக அரசுகளும், மத்திய அரசும் முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

