ADDED : ஜன 19, 2026 05:31 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ரயில்வே பீடர் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ராஜகோபால்: இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கருப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் வரை ஒரு கி.மீ., தொலைவுக்கு ரயில்வே பீடர் ரோடு அமைந்துள்ளது. கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், இரும்பாடியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக விவசாயிகள் இந்த ரோட்டின் வழியே விளைபொருட்களை வாடிப்பட்டி சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
சோழவந்தான் இரும்பாடி ரோட்டில் பணிகள் நடந்தால் மாற்றுப் பாதையாக இந்த ரோடு பயன்படுத்தப்படும். ரோடு சீரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
தற்போது பல இடங்களில் தார் ரோடு பெயர்ந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது.
மேடு, பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் தடதடக்கின்றன. பல இடங்களில் ஒருவழிப்பாதையாக மாறியுள்ளது.
இரவில் போதுமான விளக்குகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
