ADDED : ஜூலை 20, 2025 04:48 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் வடக்கு தெரு முச்சந்தியில் 'மரங்களால் மின் தட்டுப்பாடு, கழிவு நீர் செல்ல இயலாத நிலை உள்ளது' என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சப்பாணி கூறியதாவது: இங்கு பழமையான இச்சி, வாகை மரங்கள் உள்ளன. இரண்டு மரத்தின் கிளைகளும் மின் கம்பிகளுக்குள் படர்ந்து வளர்ந்துள்ளன.
காற்று வேகமாக வீசும் போது கிளைகள் அசைந்து மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது கிளைகளை வெட்டி அகற்றினாலும் மீண்டும் மீண்டும் தொடர்கிறது.
இங்குள்ள வாகை மரத்தின் வேர்கள் அருகே செல்லும் சாக்கடையை அடைத்தபடி வளர்வதால் வாய்க்கால் குறுகி கழிவு நீர் செல்லாமல் தடைபடுகிறது. மழைக்காலங்களில் குப்பை குறுகலான பகுதியில் அடைப்பதால் கழிவு நீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.
ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஊராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'வி.ஏ. ஓ., வனத்துறையிடம் அனுமதி கேட்டு விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.