/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் கனமழையால் வீணான பெரியாறு குடிநீர்
/
மதுரையில் கனமழையால் வீணான பெரியாறு குடிநீர்
ADDED : அக் 14, 2024 07:56 AM

மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பெரியாறு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் வீணானதுடன் தேங்கிய குடிநீரில் சிக்கிய வாகனங்களால் பாதிப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை அக்., 15ல் (நாளை) துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும் சில நாட்களாக மதுரையில் மேகமூட்டத்துடன் துாறலும், லேசான மழையுமாக கழிந்தது.
நேற்று முன்தினம் இரவு திடீரென திரண்ட கருமேகங்கள் ௩ மணி நேரமாக கனமழையாக பெய்ததால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோடுகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து இடியும், மின்னலுமாக விடிய விடிய மழை தொடர்ந்தது.
மதுரை தல்லாகுளத்தில் அதிகபட்சம் 121 செ.மீ., கொட்டித் தீர்த்தது. இதனால் நகருக்குள் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பழங்காநத்தம் பிரதான சாலையில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்தது.
இதில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணானது. இப்பகுதியில் திருப்பரங்குன்றம் ரோடு விரிவாக்க பணி நடப்பதால் குழாய் உடைந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மழை நேரம் என்பதால் இரவு வீணான குடிநீரை நிறுத்தவும் யாரும் இல்லை.
வெளியேறிய குடிநீர் அருகில் உள்ள மத்திய கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு மருந்தகம், கார் பார்க்கிங் பகுதிகளில் மழைநீருடன் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
மூன்று ஏக்கர் பரப்பிலான இடத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. இதில் கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் அதிகாரிகள், வாகனங்கள், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார், லாரி உட்பட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் சிக்கின. அவற்றை வெளியே எடுக்க முடியவில்லை.