ADDED : ஏப் 08, 2026 08:32 PM
மதுரை : 'வறண்ட வானிலை, காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதாலும், பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து பயிர்கள் பலவீனமாக இருப்பதாலும் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கமலாலெட்சுமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நெல், பயறு வகைகள், காய்கறி பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி தாக்குதல்கள் கோடை காலத்தில் அதிகரிக்கும். மேலும் பூஞ்சான நோய்களான சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், வைரஸ் நோயான மஞ்சள் தேமல் நோயால் பயிர்கள் பாதிக்கப்படும். நெற்பயிரில் தண்டுதுளைப்பான், இலைச்சுருட்டு புழு, ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலும், பருத்தியில் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதலும் அதிகரிக்கலாம்.
கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப்புழுக்கள் வெளிவரும். அவை வெயிலின் தாக்கத்தால் அழிவதோடு பறவைகளுக்கு இரையாகிறது. கோடை உழவுக்கு பின் மழை பெய்யும் போது மழைநீர் முழுவதும் நிலத்தில் உறிஞ்சப்படுவதால் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி வேப்பெண்ணெய் கரைசலை தெளிக்கலாம். வெள்ளை ஈ தாக்குதல் உள்ள இடங்களில் 'சிந்தடிக் பைரித்ராய்டு' வகை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தினால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும். வயலில் களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். பயிர்களுக்கு மூடாக்கு அமைப்பதன் மூலம் ஈரப்பதத்தை காப்பதுடன் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
மஞ்சள் நிற ஒட்டும் அட்டை ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து வெள்ளை ஈ, இலைப்பேன் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம். ஏக்கருக்கு 5 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகளை ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டுவதன் மூலம் பழ ஈக்களின் தாய்பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். டிரைகோகிரம்மா ஒட்டுண்ணி ஏக்கருக்கு 2 சி.சி., என்ற அளவில் இலையின் அடிப்பாகத்தில் கட்டுவதன் மூலம் நெல் இலைச்சுருட்டு புழு, தண்டுத்துளைப்பான், பருத்தி காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணிகளை பயன்படுத்தும் போது 7 முதல் 10 நாட்களுக்கு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது என்றார்.
