ADDED : மார் 23, 2026 06:43 AM
மதுரை: மதுரை யானைக்கல் கல்பாலம் அருகே வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகையை சுத்தம் செய்து, பாதுகாக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
இயக்க நிர்வாகி வைகை ராஜன் தலைமை வகித்தார். கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும். தொழில்நுட்ப உதவியுடன் ஆற்றின் எல்லையை வரையறுக்க வேண்டும். கட்டுமானம் இல்லா பசுமை மண்டலம் உருவாக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்றி நீர் மருது, மூங்கில் போன்ற உள்நாட்டு மரங்களை நட வேண்டும்.
சமூக பொறுப்புள்ள அமைப்புகளை உள்ளடக்கிய 'வைகை கண்காணிப்புக் குழு'வை உருவாக்கி 6 மாதங்களுக்கு ஒருமுறை நதி ஆரோக்கிய தணிக்கை நடத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வைகை டிரஸ்ட் நிறுவனர் அண்ணாத்துரை, வழிகாட்டி மணிகண்டன், சமூக ஆர்வலர்கள் நேதாஜி சுவாமி நாதன், பார்த்தசாரதி, ஆழ்வார்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
