மதுரையில் மீண்டும் பிளஸ் 2 மண்டல முகாம்: முடிவுக்கு வந்த மூன்றாண்டு 'சோதனை'
மதுரையில் மீண்டும் பிளஸ் 2 மண்டல முகாம்: முடிவுக்கு வந்த மூன்றாண்டு 'சோதனை'
ADDED : ஏப் 01, 2026 06:25 PM
மதுரை: மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மண்டல விடைத்தாள் முகாம் மூன்றாண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கான இம்முகாம் மதுரையில் ஆண்டுதோறும் நடந்தது. 2020 - 2021ல் மதுரையில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு நடந்தது. விடைத்தாள் திருத்தும் முகாமில் மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்வி அலுவலர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 ஆண்டுகளாக மதுரையில் மண்டல முகாம்களை கல்வித்துறை நடத்தவில்லை. அதற்கு பதில் சிவகங்கை, விருதுநகரில் நடந்தது.
இந்தாண்டுக்கான மண்டல முகாம் மதுரையில் சி.இ.ஓ., தயாளன் தலைமையில் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 9 மாவட்டங்களில் தேர்வு எழுதிய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள் கவர்கள் ஷப்ளிங் (கலக்கி பிரித்தல்) செய்யப்பட்டு வருகின்றன.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகமலை புதுக்கோட்டையில் நடக்கும் இப்பணியில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர், அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு புகாரின்றி நடத்தி முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
