கல்லுாரி மாணவி தற்கொலை முயற்சி
மதுரை: திருப்பாலை மந்தையம்மன் கோவில் தெரு பிரதீபா 21. தனியார் கல்லுாரி மாணவி. சில நாட்களாக கல்லுாரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த மே 4ல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் துாக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட பெற்றோர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பிரதீபா நேற்று முன்தினம் இறந்தார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
நோயாளி பெண் தற்கொலை
மதுரை: பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்துசரவணன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருடைய மனைவி இந்திராதேவி 42. பக்கவாத நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் இரவு திடீரென துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ. 65 லட்சம் பொருட்கள் இழப்பு
மதுரை: ஐராவதநல்லுார் செல்வபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கார்த்திகா தேவி 39. மதுரை வடக்கு வெளி வீதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மே 10 இரவு கடையை அடைத்துவிட்டு, கணவருடன் வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தது. திலகர் திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மதுரை: திண்டுக்கல் பஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் இமானுவேல் 19. ஐ.டி.ஐ., படித்தவர். மகப்பூப்பாளையம் அன்சாரி நகர் 7-வது தெருவில் தங்கி தனியார் நிறுவன கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். மூன்றாவது மாடியில் கான்கிரீட் வேலைக்காக லிப்ட் மூலமாக பொருட்களை இமானுவேல், சிங்கராயர் ஆகியோர் கொண்டு சென்றனர். அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இமானுவேல் உயிரிழந்தார். சிங்கராயர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
நான்கு பேர் கைது
திருமங்கலம்: சோழவந்தான் ரோட்டில் வாகைக்குளம் பிரிவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த டூவீலரை சோதனையிட்டபோது கஞ்சா கடத்தியது தெரிந்தது. மம்சாபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 25, தொட்டியபட்டியை சேர்ந்த மணிகண்டன் 22, ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த மதிப்பனுாரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 20, துள்ளுக்குட்டி நாயக்கனுார் வணங்காமுடி 21, ஆகியோரையும் கைது செய்தனர்.
திருவிழாவில் அடிதடி
திருமங்கலம்: இந்த நகரில் நடந்து வரும் திருவிழா மற்றும் பொருட்காட்சியில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் கார்த்தி என்பவர் காயமடைந்தார். அவரது புகாரில் திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ், கார்த்தி, மணிமாறன், அரசு பஸ் கண்டக்டர் கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.